Book Launch of “VASANTHAKAALA NADHIYILE” @ K.K.Nagar

0

Book Launch Of  “VASANTHAKAALA NADHIYILE” written by Journalist Thenni Kannan

Book Launch Of  "VASANTHAKAALA NADHIYILE" written by Journalist Thenni Kannan

Book Launch Of “VASANTHAKAALA NADHIYILE” written by Journalist Thenni Kannan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“மொழியை திணித்தால் நாடு சிதறிவிடும்”

கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது.  டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் பத்திரிகையாளர் சங்கர், எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “இந்த புத்தகத்தின் ஆசிரியர் தேனி கண்ணன் எனக்கு பத்தாண்டுகளாக பழக்கமுள்ளவர் தஞ்சையில் பிறந்த இவர் அந்த நினைவுகளை எழுதும்போது என் நிர்வாண காலத்து நினைவிடம் தஞ்சையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கவித்துவமாக அமைந்திருக்கிறது. இது நா.காமராசன் எழுதிய ‘தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்’ என்ற நூலில் எழுதிய நீரின் அரவணைப்பு இல்லையென்றால் நில மடந்தை விதவையாகிவிடுவாள்’ என்று குறிப்பிட்டிருப்பார். இதேபோல அவர் ‘நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைகள் வாங்குவதற்கு என்றும் எழுதியிருப்பார்.  இதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இயல்பிலேயே கவிதை உள்ளம் இருந்தால்தான் கவிதை எழுதமுடியும். அப்படி இந்த நூலில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்.  இப்போதெல்லாம் வாத்தியார் வேலை செய்பவர்களுக்கூட கவிதை எழுதத் தெரிவதில்லை.

எனக்கு என் தாய் பாடிய தாலாட்டு பாடலைக் கேட்டுத்தான் நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். என் தம்பி தங்கைகளுக்கு பாடும்போது,

மல்லிகையால் தொட்டிலிட்டால்
வண்டுவந்து மொய்க்குமுன்னு,
மாணிக்கத்தால் தொட்டிலிட்டால்
என் புள்ளயோட மேனியெல்லாம் நோகுமுன்னு
வைரங்களால் தொட்டிலிட்டால்
வானிலுள்ள நட்சத்திரம் ஏங்குமுன்னு
மஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
நித்திலமே நீயுறங்கு பொன்னே நீயுறங்கு பூமரத்து வண்டுறங்கு
கண்ணே நீயுறங்கு கானகத்து சங்குறங்கு…

என்று பாடுவார்கள்.

நான் இதை மாற்றி இட்டுக்கட்டி பாடிப் பார்ப்பேன். இதை அப்படியே சினிமாவிற்கு வந்த பிறகு திரைப்பாடலில் பயன்படுத்தினேன். கே.சங்கர் எடுத்த படத்தில் தாலாட்டு பாடலில் நான் எழுதியபோது, அந்த தயாரிப்பாளர் பாடலை மாற்றி எழுதச் சொன்னார் ஏன் என்று கேட்டேன் படத்தின் ஆரம்பத்திலேயே தாலாட்டு பாட்டு வருது தூங்குற மாதிரி வரிகளை நீங்க எழுதியிருக்கீங்க. படம் தூங்கிடக்கூடாது. அதனால் ஆடம்மா ஓடம்மா என்று மாற்றி எழுதிக் கொடுத்தேன். ஆனாலும் படம் ஓடவில்லை. சினிமாவில் சென்டிமெண்ட் என்கிற பெயரில் மூடநம்பிக்கை பரவியிருக்கிறது.

இதேபோல தமிழில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பதட்டம் என்று சொல்லக்கூடாது பதற்றம் என்றுதான் சொல்ல வேண்டும் சுவரில் என்றுதான் சொல்ல வேண்டும் சுவற்றில் என்று சொல்லக்கூடாது. அருகில் என்று சொல்வதற்கு பதிலாக அருகாமையில் என்று சொல்லிவருகிறார்கள் இது தொலைவு என்கிற பொருளைக் குறிக்கும். இந்த தவறை முதலில் பரப்பியது கருணாநிதிதான். இதை நான் பல மேடைகளில் சொன்ன பிறகு மாற்றிக்கொண்டார்கள்.

இதேபோல்  பத்திரிகையாளர்களுக்கு நடிகர்கள் உதவிய பல சம்பவங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. ஆனந்த் தியேட்டரில் மேலாளராக இருந்த கலயாணம், நடிகர் விவேக் போன்றவர்கள் செய்த உதவிகளை பதிவு செய்திருக்கிறார். கொடுக்கக்கூடிய மனம் படைத்தவர்களுக்கு ஒரு நாளும் சரிவு வராது. எம்.ஜி.ஆர். என்னிடம் பேசும்போது நாடகங்களில் நடிக்கும் சமயத்தில் பத்து ரூபாய் சம்பளம் என்றால், அதில் ரெண்டு ரூபாய் தர்மத்துக்கு கொடுத்து உதவுவேன். நீங்களும் வளர்ந்த பிறகு பிறருக்கு உதவுங்கள் என்றார்.  உதவி செய்யும் மனிதர்களை ஔவையார் பலா மரத்துக்கு இணையாக சொல்வார்.

எம்.எஸ்.வி அவர்களோடு நான் பணியாற்றிய நேரத்தில்  ஒரு படத்துக்கு எம்.ஜி.ஆர், லதா பாடுவது போன்ற பாடல் காட்சி. அதற்கு பாடலை எழுதினேன்.  ”அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்.. உன் அங்கங்களே மன்மதனின் படைக்கலம்’ என்று எழுதினேன்  உடனே இயக்குனர் ஸ்ரீதர், படைக்கலம் என்ற வார்த்தையை நீக்க சொன்னார். காரணம் களம் என்றுதான் வரவேண்டும் கலம் என்று வந்திருக்கிறது என்றார். ஆனால் நான் களம் என்றால் போர்க்களம் என்பதைக் குறிக்கும். நான் எழுதியது ஆயுதங்களை கண் வேல் காதுகள் வாள் என்பது போல எழுதியிருக்கேன் என்று சொன்னேன். இப்படி எத்தனை பேருக்கு விளக்கம் சொல்ல முடியும் என்று ஸ்ரீதர் கோபப்பட்டார். பக்கத்திலிருந்த எ.எஸ்.வி. “நோ… நோ… ஸ்ரீதர் மனமதனின் படைக்கலம் என்கிற வார்த்தை நன்றாக இருக்கிறது. கண்ணதாசனே இப்படி எழுதவில்லை. அதனால் முத்துலிங்கம் நீங்கள் படைக்கலத்தை விட்டு விட்டு அடைக்கலத்தை மாற்றுங்கள் என்றார்.

நான் உடனே நீங்கள் அடைக்கலத்தை மாற்றச் சொல்கிறீர்கள். ஸ்ரீதர் படைக்கலத்தை மாற்றச் சொல்கிறார். இரண்டையும் மாற்றினால் நான் வெறும் கலமாக ஆகிடுவேனே என்றேன். எம்.எஸ்.வி. அப்படி சொன்னதற்கு காரணம் அடைக்கலம் என்றால் பாதிரியாரைக் குறிக்கும் அதனால் என் மீது வழக்குப் போட்டுவிடுவார்கள் என்றார். இளையராஜா சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் போட்ட டியூனுக்கு நான் பாட்டு எழுதியிருக்கிறேன். அதாவது இளையராஜா இசையில் பாடல் எழுதிய முதல் கவிஞன் நான்தான்.

இலக்கண புலமையும் இலக்கிய புலமையும் இருக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான். ‘விருமாண்டி’ படத்துக்காக பாட்டு எழுதும்போது என்னிடம் “மண்ணுக்கும் மணலுக்கும் என்னய்யா வித்தியாசம்’ என்று கேட்டார். நான் ‘மண் இரண்டெழுத்து மணல் மூன்றெழுத்து’ என்றேன். ‘என்னய்யா சின்ன பையன் மாதிரி பதில் சொல்ற’ என்று கோபப்பட்டார். ராஜா. ”மண் என்றால் உலகம், இடம், திருமண், செல்வம் என்று பல அர்த்தங்கள் இருக்கிறது என்றேன். “வேறு ஒன்றும் தெரியவில்லையா என்றார். ‘எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை என்றேன். அப்புறம்தான் அவர் சொன்னார் “மண் ஒட்டும் தன்மை உள்ளது. மணல் ஒட்டாத தன்மை உடையது. மணல் என்பது காரணப் பெயர். என்றார் இளையராஜா. நன்னூலில்கூட மரம், மண் என்பது இடுகுறி பெயர் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இளையராஜா ஒருவர்தான் அது காரணப்பெயர் என்று முதன் முதலில் சொல்லியிருக்கிறார். இதை தமிழறிஞர்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதேபோல “என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்…” என்ற குறளில் என்நன்றி என்றால் எந்த நன்றியும் என்கிற பொருள்படும். ஆனால் செய் நன்றி என்று வள்ளுவர் சொல்லியிருப்பது, தன்னை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி   உயிர் கொடுத்து, உடை கொடுத்து கல்வி கொடுத்து இந்த சமுதாயத்தில் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக நன்றாக செய்தார்களே தாய் தந்தையர், அவர்கள் செய்த நன்றியை அந்த மகன் மறந்துவிட்டால் அவருக்கு உய்வில்லை என்று புதிய விளக்கம் கொடுத்தார் இளையராஜா. குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரில் இருந்து மு.வ வரைக்கும் யாரும் சொல்லாத புதிய கருத்தை சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு தமிழறிவுமிக்கவர் இளையராஜா அவர்கள்.

இந்த புத்தகத்தில் ஒரு இடத்தில் சோவியத் ரஷ்யா பற்றி சொல்லும்போது எண்பதுகளில் ரஷ்யா உடையாமல் இருந்தது என்று  குறிப்பிட்டிருந்தார் தேனி கண்ணன். ரஷ்யா உடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று  மொழியை திணித்தார்கள். இதனால் பல மாநிலங்களாக சேர்ந்திருந்த ரஷ்யா துண்டுத் துண்டாக சிதறிப்போனது. ஒரு நாட்டில் மக்கள் இந்த மொழியைத்தான் பேச வேண்டும் என்று திணித்தால் அந்த நாடு உடைந்துவிடும்” என்று முத்துலிங்கம் பேசினார்.

விழாவில் நிறைவாக நூலாசிரியர் தேனி கண்ணன் ஏற்புரையும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நன்றியுரையும் ஆற்றினார்கள்.

tk tk1 tk2 tk3 tk4 tk5 tk7 tk8 tk9 tk10 tk11 tk12 tk13 tk14 tk15

Share.

Comments are closed.