News of Director A.P.Nagarajan.

0

News about A.P.Nagarajan.

 

 

#காவிய #நாயகன் #ஏ #பி #நாகராஜன்.

ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்பது அவரது காலகட்டத்தின் கண்ணாடி. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த சாதனையாளர்களின் வரலாற்றை அறியும் போது அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி பிரமிக்கத்தக்கது.

தமிழ் மொழியைப் பாமரரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்த்த பாங்கு அதற்கு அவர்களுடைய உழைப்பு, தியாகம் போன்றவற்றை திரைப்படங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய வ.உ.சி, பாரதியார், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்கள நம் கண் முன் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வண்ணம் கொண்டு சேர்த்த பெருமை திரைப்படங்களையே சாரும்,

திருவிளையாடல் புராணத்தையும், கந்தபுராணத்தையும், நாயன்மார்கள், மற்றும் ஆழ்வார்கள் பெருமையையும் இந்தியா மட்டுமன்றி உலகறியச் செய்தவர் தமிழ் மொழி மேல் மாறாத பற்று கொண்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.

ஈ.ரோடு மாவட்டம் அக்கம்மாபேட்டையில் 1928ல் பிறந்த இவர் பெற்றோரை இழந்து பாட்டி மூலம் டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக சபாவில் பெண் வேடமேற்று சிறு வயதில் தன் கலைப்பயணத்தை தொடங்கினார். புராணக் கதைகளையே வைத்து காலம் தள்ளிக் கொண்டிகுந்த அன்றைய திரை உலகில் சீர்திருக்கக் கருத்துகளை புகுத்தி புரட்சி செய்தவர்கள் TKS சகோதரர்கள்.

பிறகு சக்தி நாடக சபாவில் இணைந்து சில காலம் நடித்து வந்தார். அதுவும் பிடிக்காமல் பழனி கதிரவன் நாடக சபாவை சொந்தமாக தொடங்கி நால்வர் என்ற நாடகத்தை நடத்தினார்.

சங்கீதா பிக்சர்ஸ் என்ற பட நிறுவைத்தினர் இதைப் படமாக்கிய போது கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து பெண்ணரசி, நல்லதங்காள் படங்களுக்கு கதை வசனத்துடன் நடிக்கவும் செய்தார். இவர் வசனம் எழுதும் பணிகண்டு சேலம் எம்.ஏ.வி பிக்சர்ஸ் வேணு தனது கதை இலாகாவில் இவரை இணைத்துக் கொண்டார்.

இவர்களது கூட்டு தயாரிப்பில் கே.சோமு இயக்கத்தில் மாங்கல்யம் வெளிவந்து வெற்றி பெற்றது. எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் நடிப்பிலிருந்து விலகி கதை எழுதுவதில் கவனம் செலுத்தினார்.

என்.டி.ராமராவ், சிவாஜி நடித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் இவர் எழுதிய பரதன் பேசும் வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. சமஸ்கிருக பாஷை கலந்து வசனங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் தூய கொங்கு பாஷையில் இவர் எழுதிய மக்களைப் பெற்ற மகராசி பெரும் வரவேற்பைப் பெற்றது.

பின் வி.கே.ராமசாமியுடன் இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி நல்ல இடத்து சம்பந்தம், வடிவுக்கு வளைகாப்பு போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.

சிவாஜியுடன் இதன் மூலம் இணைந்து பல வெற்றிப் படங்களைக் குவித்தார். இவரது நவராத்திரி படத்தை சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்திருந்ததை ஐரோப்பிய நாடுகளில் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

பின் திருவிளையாடல் படத்தில் சிவன், பார்வதி, முருகன், ஒளவையார் நக்கீரன் பேசிய செந்தமிழ் சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் இன்றும் மக்கள் மனதில் நடனமாடியது.

தருமியுடன் சிவன் சிவாஜி புரியும் நகைச்சுவை வாக்குவாதம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனதில் கொடி கட்டிப் பறந்தது. தொடர்ந்து சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, காரைக்கால் அம்மையார், திருவருட் செல்வர், கந்தன் கருணை, அகத்தியர் போன்ற படங்கள் தமிழ் உரையாடலில் சாதனை படைத்தது.

பரதக் கலையையும், நாதஸ்வரக் கலையையும் பெருமைப்படுத்தி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் சரித்திரம் படைத்தது.

தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமாக ராஜ ராஜ சோழன் சோழர்களின் பெருமையைப் பேசியது. இந்தியாவுக்கு வெளியே விருது பெற்ற படமாக இது அமைந்தது.

எம் ஜி ஆரை வைத்து நவரத்தினம் என்ற ஒரு படம் இயக்கி வெற்றி பெற்றது.

குன்னக்குடி வைத்தியநாதன் இவரது வாராஜாவா படத்தின் மூலம் அறிமுகமாகி ஏறத்தாழ பத்து படங்களுக்கு இசை அமைத்தார்.

எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரின் முதல் படம் நல்ல தங்கை இவர் கதை வசனம் எழுதியது.

நகேஷ் அவர்களின் தருமி, வைத்தி பாத்திரங்களை சிகரத்திற்குக் கொண்டு சென்றவர்.

கமல், சிவகுமார், ஆர்த்தி நடிப்பில் குமாஸ்தாவின் மகள் என்ற சிறு பட்ஜெட் படம் வெளிவந்தது.

இவரின் மேல் நாட்டு மருமகள் படத்தில் நடனமாடிய வாணியை கமல் பின்பு திருமணம் செய்தார்.

ஏ.பி.என் அவர்கள் ஒரு பாடலும் பாடி உள்ளார். கண்காட்சி படத்தில் ஒரு பாடலுக்கு தொகையறா பாடி உள்ளார்.

இவரது சொந்தப் படங்களில் “பேரன்பு கொண்ட ரசிகப் பெருமக்களுக்கு, வணக்கம் ” என்று தன் படங்களில் தன் குரலில் முதலில் வசனம் பேசி ஆரம்பிப்பது வழக்கம்..

1977ல் காலமான அவர் புகழ் தமிழ் இருக்கும் வரை தமிழ் நெஞ்சங்களை விட்டு மறையாது.

Share.

Leave A Reply