Thiraipaakkoodam a place for Lyric writers

0

பாடலாசிரியர்களை உருவாக்கும் தமிழ்த் திரைப்பாக்கூடம்!!!..

 

 

தமிழ்ச் சினிமாவில் 400-க்கும் மேலான பாடல்களை எழுதிக்கொண்டிருப்பவர் பாடலாசிரியர் பிரியன். வெளிவரத் தயாராய் சித்திரம்பேசுதடி2 உள்ளிட்ட பத்திற்கும் மேலான படங்கள்,  தற்பொழுது படைப்பில் ஐந்திணை, சிதம்பரம் ரயில்வேகேட் என பதினைந்திற்கும் மேலான படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்.

 

“அஞ்சாதே” திரைப்படத்தில் “மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே”, “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படத்தில் “செக்ஸிலேடி கிட்டவாடி” “தநா அல 4777” திரைப்படத்தில் “சொர்க்கம் மதுவிலே..”, உத்தமபுத்திரன் திரைப்படத்தில் “உசுமுலாரசே.. (செதுக்கி எடுத்த..)” மற்றும் “என் நெஞ்சு சின்ன இலை..”, “யுவன் யுவதி” திரைப்படத்தில் “உன் கண்ணைப் பார்த்த பிறகு..”,  இளையதளபதி விஜய் அவர்கள் நடித்த “வேலாயுதம்” திரைப்படத்தில் “வேலா வேலா வேலாயுதம்..” “நான்” திரைப்படத்தில் “மக்காயாலா.. மக்காயாலா.. (இளமைக்கு எப்பொழுதும்..)”,  “கோலிசோடா” திரைப்படத்தில் “ஜனனம் ஜனனம்..”, “சலீம்” திரைப்படத்தில் “மஸ்காரா போட்டு மயக்குறியே..”, “பிச்சைக்காரன்” திரைப்படத்தில் “உனக்காக வருவேன்..”, “படைவீரன்” திரைப்படத்தில் “லோக்கல் சரக்கா..” எனஅவர் படைத்த பல பாடல்கள் பெருவெற்றியையும் புகழையும் அள்ளித்தந்தவை.

 

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து, திரைத்துறையில் எத்தொடர்பும்யாருடைய சிபாரிசுகளும் அற்று, சாமானியனாகப் போராடி தனக்கான இடத்தை உருவாக்கி கொண்ட அவர் தனது ஆரம்பகால போராட்டத் தருணங்களை மனதில் கொண்டு வளரும் இளம் பாடலாசிரியர்களுக்காக, பாடல் எழுத வேண்டும் எனும் கனவு கொண்டவர்களுக்காக ஒரு களத்தை 2013ஆம் ஆண்டு உருவாக்கி உள்ளார்.

 

தமிழ்த் திரைத்துறையில் இசை,  இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்தையும் கற்றுக்கொள்ளப் படிப்புகள் உள்ளன. பாடல் எழுதுவதற்கென்று, அதைக் கற்றுக்கொள்வதற்கென்று எந்தப் படிப்பும் இல்லை. உலக வரலாற்றில் முதல் முறையாக.. முறைப்படி திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்காக பாடலாசிரியர் பிரியன் உருவாக்கிய “தமிழ்த் திரைப்பாக்கூடம்”  எனும் அமைப்பு.. கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பான முறையில் பாடல் எழுதும் கலையை தகுதி உடையோர்க்கு கற்பித்துவருகிறது.

 

விஜய்ஆண்டனி, தினா, கண்ணன்,  சைமன்,  ஜீபின், சாஜன் மாதவ் போன்ற பல இசையமைப்பாளர்களும்,  வேலுபிரபாகரன், சசி, ஜி.என்.ஆர்.குமாரவேல், ரவியரசு, வசந்தமணி, ரஞ்சித், தனா, மோகன்போன்ற பல இயக்குநர்களும், பலபாடலாசிரியர்களும், பாடகர்களும், மேலும் பல திரைத்துறை பிரபலங்களும் இப்படிப்புக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்து  வகுப்பெடுத்துச் சிறப்பித்துள்ளனர். 

 

இதில் சிறப்பு என்னவென்றால் இவ்வகுப்பை எடுக்கும் பாடலாசிரியர் பிரியன் உட்பட திரைத்துறை பிரபலங்கள் எவரும் இதற்காக சம்பளம்பெறுவதில்லை அனைவரும் இலவசமாகவே கற்றுத்தருகின்றனர்.  மாணவர்கள் இப்படிப்பை படிப்பதற்கு ஆகும் இயங்குதல் செலவுத்தொகையைமட்டும் செலுத்தினால் போதுமானது.

 

லாபநோக்கமற்று மனநிறைவுக்காகவும் சிறந்த அடுத்த தலைமுறைபாடலாசிரியர்களை உருவாக்கவேண்fடும் எனும்  நன்னோக்கிலும்.. மாதம் இரு சனி ஞாயிறு என ஆறுமாதங்கள் இயங்கும் இவ்வகுப்பிற்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி. இந்த பாடலாசிரியர் பட்டயப் படிப்பைக் கற்று இதுவரை பதினைந்திற்கும் மேலான பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களாக களம் இறங்கியிருக்கிறார்கள் என்பது சிறப்பு.

 

ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று, ஆண்தேவதை, ஐங்கரன், அடங்காதே, பஞ்சராட்சம், சென்னை2சிங்கப்பூர், குந்தி, மாயவன், பொய்யாட்டம், ஜீலை காற்றில், கண்மணி, கத சொல்லப் போறோம், மோசமான கூட்டம்,  வாண்டுப்பசங்க, சாந்தன், பதவி,  இருந்தும் மறைந்தேன், நடிகையின் டைரி, ஜவ்வுமிட்டாய், நீ என்ன மாயம் செய்தாய் என பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி தமிழ்ச்சினிமாவில் பாடலாசிரியர்களாக களம் இறங்கியுள்ளனர் தமிழ்த்திரைப்பாக்கூடத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

 

இந்த அமைப்பின் செயல்பாடு பற்றி பாடலாசிரியர் பிரியனிடம் கேட்டபொழுது…

 

திரைப்படங்களில் பாடல் எழுதுவது என்பதும் பாடலாசிரியர் ஆவது என்பதும் பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதற்கான சரியான களம் இல்லை. அதற்கு ஓர் அரிய வாய்ப்பு  இது. உலக அளவில் முதல் படிப்பாக.. தமிழ்த் திரைப்பாக்கூடம் வழங்கும்.. திரைப்பாடல் எழுதக் கற்றுக்கொள்வதற்கான திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு. (DIPLOMA IN LYRIC WRITING)

 

மெட்டு என்றால் என்ன? சந்தம் என்றால் என்ன? பாடல் எப்படி எழுதுவது? என்பது முதல் அதன் உத்திகள்.. அதை கையாளும் விதம்.. அதன் தொழில்நுட்பச் சூட்சுமங்கள், ஒரு பாடல் ஒலிப்பதிவாகும் முறை என முழுப்பாடலாசிரியர் ஆவதற்குத் தேவையான அனைத்தையும் பிரத்தியேகப் பாடநூல்கள் மூலமாகவும் நேரடிப் பயிற்சிவகைகள் மூலமாகவும் இவ்வகுப்பில் ஒருவர் கற்றுத்தேர முடியும்.

 

ஒரு இயக்குநர் பாடலுக்கான சூழலைச் சொல்ல.. இசையமைப்பாளர் தரும் மெட்டுக்கு ஒரு பாடலாசிரியர் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அப்படியே பயிற்சியாக இவ்வகுப்பில் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

 

பாடல் எழுதக் கற்றுக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல்..  முன்னணி இசையமைப்பாளர்களிடம் இருந்து மெட்டுக்கள் பெற்று.. அதை ஒவ்வொரு மாணவரையும் முறையாக எழுத வைத்து.. அப்பாடலை முன்னணித் திரைப்பாடகர்கள் கொண்டு பாடவைத்து, பதிவு செய்து.. இறுதியாக.. ஒவ்வொரு மாணவரும் மெட்டுக்குத் தாங்கள் எழுதிப் பதிவான பாடலோடு.. ஒரு முழு பாடலாசிரியராக உருமாற இப்படிப்பு வழிவகை புரிகிறது. 

 

இப்பயிற்சி வகுப்புகளில் முன்னணிப் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்கள் நேரடியாக வந்து வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.

 

பாடல் எழுதும் அறிவை அத்தகுதியுள்ள அனைவரும் பெறவேண்டும் என்கிற விருப்பம் சரியான முறையில் சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சி. அத்தோடு இதுவரை 15-க்கும் மேலான தமிழ்த்திரைப்பாக்கூட மாணவர்கள் தற்பொழுது  திரைப்படங்களில் பாடலாசிரியர்களாகப் பயணித்துக் கொண்டிருப்பது பெருமகிழ்ச்சி என்கிறார்.

 

சென்னையில், மாதம் இரு சனி,  ஞாயிறுகளில் நடைபெறும் இவ்வகுப்புகளில் இணைய விரும்புபவர்கள் 8939780290 எனும் கைப்பேசி எண்ணில் அழைக்கலாம். thiraippaakkoodam@gmail.com எனும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

தமிழ்த் திரைப்பாக்கூடத்தின் மூலம் பல நல்ல பாடலாசிரியர்கள் சினிமாவுக்கு கிடைக்க வாழ்த்துகள்.

Share.

Leave A Reply