Sound Engineer Udayakumar speeks about is Profession

0

Sound Engineer  Udayakumar  speeks about is Profession

Sound Engineer  Udayakumar

Sound Engineer Udayakumar

இளையராஜா ,பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை :ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்!

.

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத  திறமை சாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும்.

அப்படி ஒரு தொழில்நுட்பக் கலைஞர்தான் ஒலிப்பதிவாளர். ஒளியும் ஒலியும் இரண்டறக் கலந்ததுதான் திரைப்படம் என்றாலும் ஒளிப்பதிவாளர்களைத் தெரிகிற அளவுக்கு ஒலிப்பதிவாளர்களை வெளியே தெரிவதில்லை. அவர்கள் இன்னமும் புகழ்மறைவுப் பிரதேசத்தில்தான் இருக்கிறார்கள்.

படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவாளர் என்கிற பெயர்  நம் கவனம் பெறும் முன் கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.

ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்ற பின்தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்துவிட்டு,அண்மையில் வெளியாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலிப்பதிவும் பேசப் படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது. ‘விசாரணை’ யில் ஒலிப்பதிவுப் பொறியாளராகப் பணியாற்றியிருப்பவர் டி. உதயகுமார்.  இவர் ‘ ‘ஃபோர் பிரேம்ஸ்’உதயகுமார் எனத் திரையுலக வட்டாரங்களில் அறியப் படுபவர்.

அவரை அண்மையில் சந்தித்தபோது கூட அவர் மிகவும் மெல்லிய ஒளியுள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில்தான் பணியிலிருந்தார். இனி அவருடன்…!

உங்கள் முன் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன் ..?

நாங்கள் நடுத்தர வர்க்க குடும்பம்தான். என் அண்ணன் தும்பாராஜா ஏ.ஆர். ரகுமான் அவர்களிடம்  ரிதம் பாக்ஸ் பிளேயர். இப்போதும் பிளேயராக இருக்கிறார்.நான் ப்ளஸ்டூ முடித்துவிட்டு என்ன படிப்பது என்று யோசித்த போது எடிட்டராகலாமா ? சவுண்ட் ரெக்கார்டிங் படிக்கலாமா ? எனக் கேட்டபோது ‘சவுண்ட் ரெக்கார்டிங்  படி நல்ல வாய்ப்பு உள்ளது ‘ என்றார் அண்ணா. எனவே 1998ல் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு முடித்தேன். ஒளிப்பதிவாளர்கள் ‘சிறுத்தை’ சிவா, என். கே. ஏகாம்பரம் போன்றவர்கள் அப்போது படித்தார்கள். பிறகு செயல்முறை பயிற்சி பெற தீபன் சட்டர்ஜி அவர்களிடம் சேர்ந்தேன். இப்படி ஏழு ஆண்டுகள் போனது. உதவியாளராக பலமொழிகளில் பல படங்கள். நான் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி, கன்னடம்  என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறேன்.

திரைப்படக் கல்லூரி அனுபவம், உதவியாளர்அனுபவம் என்ன  வேறுபாடு உணர்கிறீர்கள்?

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த போது சினிமா பற்றி எதுவுமே தெரியாமலிருந்தேன். பிலிம் நெகடிவில் இருப்பதே அங்கு போனபிறகுதான் எனக்குத் தெரியும் அந்த அளவுக்கு இருந்த என்னை, திரைப்படக் கல்லூரி பல விஷயங்களைத் தெரிய வைத்தது .இருந்தாலும் ஒலிப்பதிவு பற்றி அடிப்படைகள் நடை முறைகளைத்தான் அறிந்து கொண்டேன். செய்முறை அனுபவம் இல்லாமல் படங்களில் பணியாற்ற முடியாது. எனவேதான் என் குருநாதர் தீபன் சட்டர்ஜி அவர்களிடம் சேர்ந்தேன். எனக்கு எல்லாமும் கற்றுக் கொடுத்தவர் அவர்தான். அவரிடம் கற்றது இன்னொருமுறை திரைப்படக் கல்லூரியில் படித்தது போலிருந்தது.. அவரிடம் பலமொழிகளில் பணியாற்றினேன். அவரிடம் இருந்தபோதுதான் ஒரு படத்தை ஒலிமூலம் எப்படிப் பார்ப்பது? ஒலி எந்தஅளவுக்கு பங்கு வகிக்கிறது என்கிற தெளிவு கிடைத்தது.

உங்கள் பணியின் தன்மை எப்படி இருக்கும்?

எடுக்கப்பட்ட படத்துக்கோ, காட்சிகளுக்கோ ஒலி சேர்ப்பது முக்கிய பணி. ஒலிப்பதிவில் பல வகைகள் உள்ளன. பாடல் ஒலிப்பதிவு, பின்னணி ஒலிப்பதிவு, டப்பிங் எனப்படும்  வசனங்  களுக்கான குரல் ஒலிப்பதிவு, ,  ஸ்பெஷல் எபெக்ட் ஸ் எனப்படும் சிறப்பு சத்தங்கள் , இறுதியாக பைனல் மிக்ஸிங் எனப்படும் ஒலிக் கலவை எல்லாவற்றையும் கலந்து இணைப்பது என ஒலிப்பதிவில் பல வகைகள்  உண்டு.

இந்த பைனல் மிக்ஸிங் பணியைத்தான் நான் இப்போது நான் பார்த்துவருகிறேன். இங்குதான் படத்தில் வரும் இசை, வசனம், பின்னணி இசை எல்லாம் எந்த அளவுக்கு வரும் , எந்த தன்மையில் வரும் என்பதெல்லாம் இறுதி செய்யப்படும். எனக்கு எல்லாவிதமான ஒலிப்பதிவு அனுபவமும் உண்டு. எல்லா அனுபவமும் இருந்தால்தான் இந்த வேலையைச் செய்ய முடியும்.

ஒலிப்பதிவாளருக்கான அடிப்படையான தகுதி என்ன?

ஒரு படத்தின் கதைக்கும் இயக்குநரின் பார்வைக்கும் தக்கபடி ஒளிப்பதிவு மட்டுமல்ல ஒலிப்பதிவும் இருக்கும். இது படத்துக்குப் படம் நபருக்கு நபர் வேறுபடும்.

அதற்கு ஏற்ப எங்கு எந்த அளவில் வசனம், ஒலிகள், இசை, கருவிகள் இசை வரவேண்டும் என்பது முடிவு செய்யப்படும். கூட்டியோ குறைத்தோ கலவை செய்யப்படும். காற்று வீசும் ஒலிக்குக் கூட கதையில் அர்த்தம் உண்டு. எனவே ஒலிப்பதிவு செய்பவர் கதையை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்கள் பணியாற்றிய படங்களில் முக்கியமானவை?

அண்மைக்காலப் படங்களான ‘பொல்லாதவன்’ ,ஆடுகளம், நான் மகான் அல்ல,அஞ்சாதே,யுத்தம் செய், நாடோடிகள், வாகை சூட வா,வல்லினம்,மெட்ராஸ், சிறுத்தை,மதயானைக்கூட்டம், ஆதலால் கதல் செய்வீர்,எதிர் நீச்சல்,நீர்ப்பறவை,  ‘உப்புகருவாடு’ பூஜை, வேதாளம், மீகாமன், ரஜினி முருகன், விசாரணை,பெங்களூர்நாட்கள் வரை சுமார் 300 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.ஒவ்வொரு இயக்குநரிடம் பணிபுரிவதும் ஒவ்வொரு அனுபவம்.’அழகர் சாமியின் குதிரை’ படத்தில் பணிபுரிந்த போது இசைஞானி இளையராஜாவுடன் அருகிலிருந்து பணியாற்றிய போது அவர் சொன்னார் ‘ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்கிறேன்’ என்றார் .ஆயிரம் படங்கள் என்கிற சாதனை படைத்த அவரே அந்த நிலையில் இருக்கும் போது , ஒன்று புரிகிறது.  நானும் இன்னமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.

கால மாற்றம் தொழில்நுட்பமாற்றம் உங்களை எப்படி பாதித்துள்ளது?

சினிமாவுக்கு நான் வந்த போது சினிமாவில் பிலிம் புழக்கத்தில் இருந்தது. பிறகு டிஜிட்டலுக்கு மாறி படிப்படியாக இப்போது பெரும்பாலும்  எல்லாமே டிஜிட்டலாகி விட்டது. இந்த மாற்றம் எனக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.

பிறகு தயாராகி விட்டேன்.இப்போது பழகிவிட்டது. நாளுக்குநாள் இதில் நவீன முன்னேற்றம்  சார்ந்து கருவிகள் வந்து கொண்டு இருக்கின்றன. நாம் ‘அப்டேட்’ செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உங்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லையே என ஆதங்கம் உண்டா?

அங்கீகாரம் இல்லை என்கிற ஆதங்கம் நிச்சயமாக உண்டு. இந்தஆதங்கம் எல்லா ஒலிப்பதிவாளர்களுக்கும் இருக்கும். ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்ற பின்புதான்  எங்கள் துறை ஒரு கவனம் பெற்று இருக்கிறது. இப்போதுதான் இப்படிப்பட்ட  ஒரு தொழில் நுட்பம் இருக்கிறது. என்கிற விழிப்புணர்வு வந்து இருக்கிறது. சினிமா விமர்சனங்களில் ஒளிப்பதிவு பற்றி குறிப்பிடுபவர்கள்,எங்களையும் பற்றி  ஒரு வரி குறிப்பிட்டு எழுதலாம்.

பிரபல இயக்குநர்களிடம் பணிபுரிந்த போது சந்தித்த அனுபவங்கள் எப்படி?

நான் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முதல் புதுமுக இயக்குநர் படங்கள் வரை பணிபுரிந்திருக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகம்தான்.

ஒலியில் ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது வேறாக இருக்கும். பி.வாசுசார் ஒருமாதிரி  கோணத்தில் பார்ப்பார்,வெற்றிமாறன் சமுத்திரக்கனி, போன்றவர்கள் வேறுமாதிரி  கோணங்களில் பார்ப்பார்கள். புதியவர்கள் வேறுமாதிரி பார்ப்பார்கள்.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் பாரதிராஜாசார்  ஒலியில் வட்டார மொழி சரியாக வர வேண்டும் பிசிறு தட்டக் கூடாது என்பார்.இது அவரது கோணம். பாக்யராஜ்சார் வசனம் சரியாக இருக்க வேண்டும் என்பார். இது அவரது அணுகுமுறை.பி.வாசுசார்  ஒலி நேர்த்தியாக தெளிவாக இருக்க வேண்டும் என்பார்.இப்படி  இந்தக்கோணமும் பார்வையும்  அணுகுமுறையும் அவரவர்க்கு மாறுபடும்.

.’அழகர் சாமியின் குதிரை’ படத்தில் இசைஞானியுடன்  பணி புரிந்தபோது அவர் மியூசிக் போட்டிருந்த சில இடங்களில் எல்லாம் மியூட்  செய்யச் சொன்னார்.பொதுவாக இசையமைப்பவர்கள் தாங்கள் இசை அமைத்ததை நீக்கச்சொல்லமாட்டார்கள்.இசை அமைத்ததை அப்படியே வைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அவர் நீக்கச்சொன்னார். சில இடங்களில் அந்த நிசப்தமான மௌனம்தான் பொருத்தமான இசை என்றார். எதுவுமில்லாமல் நிசப்தமாக விடுவது கூட அர்த்தமுள்ளது என்று புரிய வைத்தார்.

வேறு துறைக்குப் போயிருக்கலாமே என்று  எப்போதாவது எண்ணிய துண்டா?

படப்பிடிப்பு முடிந்து கடைசியில் எங்களிடம்தான் வந்து நெருக்கடி கொடுப்பார்கள். சீக்கிரம் முடித்துக் கொடுங்கள் என்று அழுத்தம் கொடுப்பார்கள்.வீட்டை மறந்து இரவு பகல் என்று வேலை பார்த்து முடிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்க முடியாது. வீட்டை பிரிந்து இருப்பது போல உணர்வோம். இந்த மன அழுத்தம், உளைச்சல் வெளியே தெரியாது. அவசரத்துக்காக ஏனோ தானோவென்று எங்கள் வேலையைச் செய்ய முடியாது. செய்தால் நேர்த்தியாக கவனமாகத்தான் செய்ய வேண்டும். இரவு பகல் என்று  தொடர்ந்து வேலை பார்க்கிற போது  எல்லாம்  வீடு குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லையே என வருத்தமாக இருக்கும்.

வீடு, குடும்பம் எப்படி?

என் மனைவியின் பெயர் லாவண்யா, ஒரே மகன் பெயர் சாய் கிருஷ்ணன். பத்தாம் வகுப்பு படிக்கிறான். எங்கள் பணியில் உள்ள பணிச்சுமை, மன அழுத்தம் என் மனைவிக்குப் புரியும். ஓய்வான சமயங்களில் எங்காவது சத்தமே இல்லாத வாகனங்கள் இல்லாத பகுதிக்குப் போகலாம் என்று தோன்றும்.ஆனால் அது மனதில் மட்டுமே விருப்பமாக இருக்கும் ஆனால் யதார்த்தத்தில் முடியாது.  ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம்.

‘விசாரணை’யில் பணி புரிந்த அனுபவம்?

வெற்றி மாறனின் முதல் படமான ‘பொல்லாதவன்’ முதல் அவருடன் பணி புரிகிறேன். முதல்படத்தில் டப்பிங் நீண்ட நாள் போனது. மிக்சிங் விரைவில் முடிக்கச் சொன்னார். ஏனென்றால் படத்தை தீபாவளிக்கு வெளியிடும் நெருக்கடி இருந்தது. வசனம் வந்தால் போதும் என்கிற நிலைஇருந்தது. எங்களுக்குவேலை செய்ய நிறைய விஷயம் படத்தில் இருந்தது. ஆனால் நேரம் தரவில்லை. அந்தக் குறை ‘ஆடுகளம்’ படத்தில் நீங்கியது. அவகாசம் கொடுத்தார். பின்னணி இசை இல்லாமல் ,கிராபிக்ஸ்இல்லாமல் ,பாடல்இல்லாமல் என பல வடிவங்களில் செய்தோம்.

‘விசாரணை’ இதற்கு நேர் தலைகீழ் அனுபவம் முதலில் படவிழாக்களுக்கான வெர்ஷன் தயார் செய்யப்பட்டது. பிறகு திரையிட வேறொரு வெர்ஷன் தயார் ஆனது.ஒன்றரை வருடம் வேலை செய்தோம். அதற்கு ‘வெனிஸ்’ விழாவில் விருது கிடைத்ததும் நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்த உணர்வு.பிறகு மும்பை படவிழாவில் விருது பெற்றது. இப்படி பல விருதுகளைக் குவித்தது. வெனிஸில் என் ஒலிப்பதிவும் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது என்கிற செய்தியறிந்து மகிழ்ந்தேன். பெருமையாக இருந்தது.நம் உழைப்பு வீண் போகவில்லை என்று திருப்தியாக , நிம்மதியாக இருந்தது. பலநாள்கள் இதற்காகத்தான் கஷ்டப்பட்டோம் என நினைத்தேன். ஒரு உலகத்தரமான படத்தில் நாமும் இருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியில் எந்தக்கஷ்டமும்  படலாம் எனத் தோன்றியது. பல தேசிய விருது, சர்வதேச விருதுப் படங்களில் பணியாற்றியுள்ள  எனக்கு’ பிஹைண்ட் வுட்ஸ் விருது’, ;வி4 விருது  ‘போன்ற விருதுகள் கிடைத்துள்ளன.

இப்போது பணியாற்றும் படங்கள்?

சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல் ‘முடிந்து இருக்கிறது.ஜெயம்ரவியின் ‘மிருதன்’, விஜய்சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’, ‘ஆறாது சினம்’ ,ஜீவா நடிக்கும் ‘போக்கிரிராஜா’,சமுத்திரக்கனியின் ‘அப்பா’, இளையராஜாவின் இசையில் புதியவர் லெனின் பாரதி இயக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற படங்கள் பணியில் உள்ளன.

Share.

Comments are closed.