Upcoming atriste MUJIP in MUDHAL THAGHAVAL ARIKKAI
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் வில்லன் நடிகரானதுடன் தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார் என்றால் ஆச்சரியமில்லையா?
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.முஜீப். பால்ய வயதில் சினிமா மோகம் வந்து படங்களைப் பார்த்துத் தள்ளியவர், விஜயகாந்துக்கு தன்னிடம் திறமை இருப்பதாகவும் வாய்ப்பு கொடுத்தால் நிரூபிப்பதாகவும் கடிதம் எழுதியிருக்கிறார்.
சிலநாட்களில் விஜயகாந்த் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது. ‘திறமைக்கு வாழ்த்து, மகிழ்ச்சி! அலுவலகம் வந்து சந்திக்கவும் ‘என்று கடிதத்தில் கூறியிருந்தது. உடம்பெல்லாம் சிறகு முளைக்க சென்னைக்கு ஓடோடி வந்திருக்கிறார் முஜீப். சென்னைக்கு வந்தவர், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் பார்க்க முடிந்தது.
பிறகுதான் புரிந்திருக்கிறது அது சம்பிரதாயமான ஊக்கக் கடிதம் என்று.
சினிமாவுலகில் நுழைய மன கதவுகள் தட்டிக் கொண்டிருக்க “சினிமா உனக்கு வேண்டாம், ஊருக்கு வா, வெளிநாடு போய் பிழைக்கிற வழியைப் பார்” என்று ஊரிலிருந்து அழைப்பு வரவே, குடும்பக்கடமையும் பொறுப்பும் துரத்த வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா என சென்று பணி புரிந்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகள் அந்நியதேச வாசம். குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர், விடுமுறைக்காக வந்திருந்தபோது தனது ஊருக்கு பக்கத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவரை அழைத்த இயக்குநர், அந்தப் புதிய படத்தில் அவருக்கேற்ற கதாபாத்திரத்தை சொல்லி போலீஸ் வேடமும் கொடுத்து நடிகராக்கி விட்டார். அந்தப்படம்தான் ‘முதல் தகவல் அறிக்கை’.
முஜீப் அசப்பில் நடிகர் கிஷோரின் சாயலில் இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவரை கிஷோராக நினைத்து வெளியூர்களில் ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு துரத்திய அனுபவமும் உண்டு இவருக்கு. ‘நான் அவரில்லை’ என்று முஜீப் எவ்வளவோ கூறியும் பார்க்கிற பலரும் நம்பாமல் கை குலுக்குகிறார்களாம் .
முதல்படமான ‘முதல் தகவல் அறிக்கை’ வெளிவரும் முன்பே இவரது தோற்றத்தைப் பார்த்து ‘விலாசம்’ மற்றும் ‘மசாலா படம்’ என வாய்ப்புகள் வந்து நடித்து வெளிவந்தும் விட்டது.
அனைத்தும் சினிமாக் கதை போலவே நடந்து முடிந்ததாகக் கூறுகிறார் முஜீப்.
படத்தை இயக்கியுள்ள பா. ராஜகணேசன் ஏற்கெனவே ‘விலாசம்’ படத்தை இயக்கியவர்.
படத்தில் நாயகனாக ரயான், நாயகியாக கல்பனா ஜெயம் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ராஜகணேசன் ஏற்கெனவே ‘அம்மா அப்பா செல்லம்’ படத்துக்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர்.
ஒளிப்பதிவு- ராஜபார்த்திபன், எடிட்டிங்- ரங்கீஷ் சந்திரசேகர், இசை-ரவிராகவ்.
படப்பிடிப்பு தஞ்சாவூர், மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றுள்ளது. பெரும்பகுதி மன்னார்குடியில் நடைபெறுகிறது.
சமுதாயத்தில் எதிர்பாராத விதமாக ஏற்ப டும் விபத்துகளில் அரிதாரம் பூசியவர்களுக்கும் அவதாரம் எடுத்தவர்களுக்கும் ஏற்படும் விளைவுகளே “முதல் தகவல் அறிக்கை”.
முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள ‘முதல் தகவல் அறிக்கை’ புதுமை விரும்பிகளாக உள்ள தமிழ் ரசிகர்களை மட்டும் நம்பியே விரைவில் வெளியாகிறது.